தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்னக ரயில்வே தேர்வில் பாதிக்கு மேல் இந்தி தேர்வர்கள்: அதிர்ச்சியளிக்கும் தகவல் - தென்னக ரயில்வே தேர்வு

தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்பவியலாளர் பணிகளுக்கான 2556 நியமனங்களில் 1636 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியுள்ளனர் என்று மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளித்துள்ளார்.

su venkatesan
su venkatesan

By

Published : Sep 17, 2020, 5:17 PM IST

மதுரை: தென்னக ரயில்வே தொழில்நுட்பவியலாளர் பணிகளுக்கான தேர்வில் பாதிக்கு மேல் இந்தி தேர்வர்கள் எழுதியுள்ளனர் எனும் அதிர்ச்சிகர தகவலை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்களை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரியிருந்தார். அதற்கான பதிலை அளித்த அமைச்சர், தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான தேர்வெழுதிய 2556 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 1686 பேர் என்றும், தமிழில் எழுதியவர்கள் 139 பேர் எனவும், மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர் என்றும் பதில் அளித்துள்ளார். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர் என பதில் அளித்துள்ளார்.

இளநிலைப் பொறியாளர் நியமனத் தேர்வு எழுதிய 1180 பேரில், இந்தியில் எழுதியவர்கள் 160 பேர் என்றும், மலையாளம் 315 பேர், தமிழ் 268 பேர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் 437 பேர் தேர்வெழுதியுள்ளனர்.

அசிஸ்டெண்ட் லோகோ பைலட் நியமனத்தில் தேர்வு எழுதிய 908 பேரில், இந்தியில் எழுதியவர்கள் 90 பேராகவும், மலையாளத்தில் 176 பேரும், தமிழில் 333 பேரும் தேர்வெழுதியுள்ளனர். ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் தரவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த சு. வெங்கடேசன், “ரயில்வே நியமனங்களில் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக தேர்வு பெறுவது நடக்கிறது. இது மக்களுக்கான சேவையையும் பாதிக்கும். சேவை சார்ந்த நிறுவனங்களில் மக்களோடு உரையாடவும், சக தொழிலாளர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் மாநில மொழி அறிவு மிக முக்கியம். இந்தி பேசக் கூடியவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் அதாவது 66 விழுக்காடு அளவுக்கு தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ரயில்வே நிர்வாகம் அந்தந்த மாநில மொழிகளில், தெற்கு ரயில்வே எனில் தமிழ், மலையாளத்திலான மொழி அறிவை எல்லா தேர்வர்களுக்கும், கூடுதல் தேர்வை இணைக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகள் மற்ற பல பொதுத் துறை நிறுவனங்களில் உள்ளன. இதுவே வேலை வாய்ப்புகளில் எல்லா மாநிலங்களுக்கான நீதியையும், மக்களுக்கான சேவையையும், பயணிகளுக்கான பாதுகாப்பையும், திறம்பட்ட செயல்பாட்டையும் உருவாக்கும்” எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details