மதுரை:அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ள நிலையில், இதுகுறித்து மதுரையில் உள்ள வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் நேற்று (ஜூலை 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அனைத்துத் தரப்பு மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு தொடரவேண்டும்.
வணிகப்பெயர் இருந்தாலும் வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று எங்கள் வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்திந்திய அளவில் பல்வேறு வர்த்தக சங்கங்கள் வலிமையாக வலியுறுத்தியும் கூட, இதுவரை வரிவிலக்கு பெற்றிருந்த உணவுப் பொருள்களுக்கு 2022 ஜூலை 18ஆம் தேதி (நாளை) முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
அரிசி, மாவு, பயறு, பருப்பு வகைகள், தயிர், பன்னீர், மோர், வெல்லம், கண்டசரி, சீனி, சோளம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விலைகள் உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுவர்.
முன்னதாகவே பேக் செய்து லேபிள் இடப்பட்ட, எடையளவு சட்டப்படி "சில்லறை விற்பனைக்கான பேக்கிங்கிக்கு" வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், "சில்லறை விற்பனைக்கான பேக்கிங்" என்ற வார்த்தைகள் விடுபட்டுள்ளன.