சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்குத் தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு விசேஷ தீபாராதனை நடைபெற்றன.
செவ்வாய் பொங்கல் விழா
அதன்பின்னர், கோயிலைச் சுற்றி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட அடுப்புகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நாட்டரசன்கோட்டை நகரத்தார் சமூகத்தின் சார்பில் 918 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
இவை தவிர, கண்ணுடையநாயகியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்களும் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்தார்.
பின்னர் கண்ணுடைய நாயகி அம்மன் வீதி உலா எழுந்தருளினார். அப்போது, ஒவ்வொரு பொங்கல் பானைக்கு உரிய குடும்பத்தினரும் அம்மனுக்கு மாலை சாற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.
சிவகங்கை, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.