மதுரை மாநகரக் காவல் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக 54 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்த 44 ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மதுரை மாநகர காவல் துறை நேற்று (செப். 27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“மதுரை மாநகரில் ரவுடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை காவல் துறையினரால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், முக்கியக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 54 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 17 வாள்கள், 22 கத்திகள், ஐந்து அரிவாள்கள் உள்பட மொத்தம் 44 ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் படைக்கலன் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுதங்கள் வாங்குபவர்களின் விவரங்கள் சேமிப்பு
இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகரில் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், ஆயுதங்களை விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் ஆயுதங்கள் வாங்க வருபவர்களின் விவரங்கள், முகவரி, தொலைபேசி எண், என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் என்ற விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவுசெய்து பராமரித்துவர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல் துறை அறிவிப்பு
மேலும், அவர்களது கடைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி பதிவுகளைப் பராமரித்து வர வேண்டும் எனவும் ஆயுதங்கள் வாங்க வருபவர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்களுடனான கூட்டம் ரவுடிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துத் தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களிடம் சந்தேகப்படும்படியாக ஆயுதங்களுடன் யாராவது ஆட்டோவில் பயணம் செய்யவந்தால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொதுமக்களுக்கான காத்திருப்பு அறைகள்: காவல் ஆணையருக்கு குவியும் பாராட்டுகள்