தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதுநிலை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை ஒப்படைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை பரிசீலிக்க உத்தரவு

மதுரை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை ஒப்படைப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பின் அகில் இந்திய ஒதுக்கீடு இடங்களை ஒப்படைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை பரிசீலிக்க உத்தரவு
Pg medical all india seats allotment case - HC directs Health dept. to review TN gov. demand

By

Published : May 6, 2020, 9:21 AM IST

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை ஒப்படைப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் முடிவை இன்று மாலை 4 மணிக்குள் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த டாக்டர் அபிமதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எம்பிபிஎஸ் முடித்திருந்த நிலையில், முதுகலை மருத்துவப் படிப்பில் சேர அதற்கான நீட் தேர்வை எழுதினேன். 690 மதிப்பெண் பெற்றதால், அகில இந்திய ஒதுக்கீட்டில், பெண்களுக்கான மகப்பேறியல் துறையில் சீட் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். இதில், 50 சதவீத இடங்கள் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். மாநில அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைத்தால், அகில இந்திய ஒதுக்கீட்டில் கிடைத்த சீட்டை ஒப்படைக்க வேண்டும்.

தற்போது மாநில ஒதுக்கீட்டில் பங்கேற்போர், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பெற்ற இடங்களை ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பரவல் காரணமாக மாநில அரசின் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் இன்னமும் நடைபெறவில்லை. இதனால், என்னைப் போன்ற பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதுகலை மருத்துவத்துக்கான தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவின் கவுன்சிலிங்கை மே 8ஆம் தேதிக்குள் நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு வீடியோ கான்பரன்சிங் வழியாக விசாரித்தார். அப்போது, மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு சார்பில், "தனியார் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கை முடிக்கவும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான சீட்டை ஒப்படைப்பதற்கான அவகாசத்தை மே 13ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "தனியார் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கை முடிப்பதற்கான அவகாசம் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை ஒப்படைப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் முடிவை இன்று மாலை 4 மணிக்குள் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மனுவை மே 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details