மதுரை:மதுரை வில்லாபுரம் காலனி, பொன் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மருதுபாண்டி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நான் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தினமும் மதுபானம் வாங்கி அருந்துவது என் வழக்கம்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் நடத்தும் இந்த மதுபான விற்பனை கடையில், மதுபாட்டிகளில் அச்சிட்டிருக்கும் நிர்ணய விலையை (MRP) விட, ரூ. 20, 30, 50 என சட்டவிரோதமாக கூடுதல் விலை நிர்ணயம் செய்து, கடையின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட டாஸ்மாக் பணியாளர்கள் விற்பனை செய்கிறார்கள்.
டாஸ்மாக் பணியாளர்களின் இந்த போக்கினை தட்டி கேட்பவர்களை, தகாத வார்த்தைகளால் திட்டியும், ரவுடிகளை வைத்து அடித்து உதைத்தும் துன்புறுத்துகிறார்கள். இது தொடர்பாக சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனை கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் இந்தப் பணம், அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்படுவதால், கூடுதல் விலை விற்பனையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில், பணியாளர்கள் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதனை தடுத்து, மதுபாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள நிர்ணய விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாட்டில், மது குடிப்பவர்கள் அதிகரித்து வரும் சூழலில், மது அடிமைகளை மது பழக்கத்திலிருந்து விடுவிக்க மாவட்டங்கள், தாலுகாக்கள் தோறும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது. விசாரணை முடிவில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படும் விஷயம் குறித்து டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க :சத்தியமங்கலத்தில் பனிப்பொழிவால் பூ வரத்து சரிவு!