இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றோடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வரும் ஆண்டாவது எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படுமா என்ற கேள்வி இருக்கும் நிலையில், கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரை சந்தித்துப் பேசினேன். ரூ.1,200 கோடி திட்டம் ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான முழு விளக்கத்தை அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஜெய்க்கா நிறுவனத்தோடு மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் எனக் கூறியுள்ளனர். மத்திய அமைச்சரவை ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் வழங்கினால்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மதுரை எய்ம்ஸ்சோடு இணைந்து அறிவிக்கப்பட்ட ஜம்மு, மங்களகிரி உள்ளிட்ட எம்ய்ம்ஸ்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையையும், கட்டிடங்களையும் கொடுத்துப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்புக்கொண்ட மாநில அரசு இதனைப்பற்றி துளியளவும் கண்டுகொள்வதில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான சிறப்பு அலுவலரை நியமிக்க தொடர்ந்து சொல்லியும் அதனை நிறைவேற்ற மறுக்கிறது.