மதுரை: இது குறித்து அவர் இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”75ஆவது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில் கடமைக்கும், உரிமைக்குமான தொடர்பை உரை எடுத்துச் சொல்கிறது. போராடுவதே கடமை என்கிறது. கடமையைச் செய்யுங்கள், உரிமைக்கு குரல் கொடுப்பதை ரொம்பவுமே செய்துவிட்டோம் என்று இரண்டையும் பிரித்த பிரதமரின் கருத்தோடு எந்தப் புள்ளியிலாவது இணைகிறதா இது.
அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதைப் பற்றி உரை பேசுகிறது. 75 ஆண்டு ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிடுவோம் என்பதுதான் இதன் பொருளா? கோவிட் தடுப்பூசி பற்றி பெருமையாகப் பேசுகிறது. 25 விழுக்காடு தனியாருக்கு தந்து, 4 விழுக்காடுகூட அவர்கள் போடவில்லை என்ற தங்களின் கொள்கை தோல்வியை ஒரு வரியாவது சொல்லி இருக்கலாமே!
அம்பேத்கர் விரும்பிய சமூகம்
அம்பேத்கர் காண விரும்பிய சமூகம் 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற மேற்கோள் அருமைதான். ஆனால் காலனி ஆதிக்கத்தின் கால் சங்கிலியான 'தேசத் துரோக' சட்டம் இன்றும் மாற்றுக் குரல் கொடுப்போரின் மீது பாய்கிறதே.
பத்ம விருதுகள் எப்படி அறிவித்து இருக்கிறோம் என்று சமத்துவம் நோக்கிய நகர்வாக சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். விருதுகள் அல்ல நகர்வுகள். உயர் கல்வி நிறுவனங்களில் இன்று வரை ஒடுக்கப்பட்டவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க மறுக்கிறீர்களே! அதைக் கொடுங்கள். சகோதரத்துவம் பற்றி உங்கள் உபி முதலமைச்சர் யோகிக்கு கற்றுக் கொடுங்கள். 85 (எதிர்) 15 கணக்கு தேசத்தின் நல்லிணக்க கணக்கை முடித்துவிடாதா?
பசி மரணங்களை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒழித்துவிட்டோம் என்கிறீர்களா! அதனை ஒழித்த இந்தியாவா உலகப் பசி குறியீட்டில் 116 நாடுகளில் 102ஆவது இடத்தில் உள்ளது? உலகின் வளர்ச்சி குன்றிய, எடை குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒன்றை இங்கே வைத்திருக்கிறது! பசியை ஒழியுங்கள், உண்மையை ஒழிக்காதீர்கள்.
பி.எஸ்.என்.எல். 4ஜி-க்கு அனுமதி தாருங்கள்
விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் பற்றிய பத்திகள் 22 முதல் 29 வரை எட்டுப் பத்தி என்ற அளவில் பெரிதாக உள்ளது. ஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதே சோகம். எம்.எஸ். சுவாமிநாதன் தொடர்ந்து வலியுறுத்தும் C2 + 50% குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி ஒரு வரி கூட இல்லை. பிரதமர் கேட்ட மன்னிப்பு, அதற்கு பின்னர் என்ன நேர்மறை நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.