மதுரை: மதுரை புதுநத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதனையடுத்து மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, 90% பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் திறப்பு விழா காண உள்ளது.
இந்நிலையில், நேற்று(செப்.20) தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலைஞர் நூலக கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நூலகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு 4000 ஆய்வு அறிக்கைகள் புத்தகங்கள் அடங்கிய கலைஞரின் ஆய்வகம் என்ற தனிப்பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 3000 புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவு, இது தவிர அரசியல், சுற்றுலா, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட 36 வகையான நூலக பிரிவுகள் செயல்படும்.
இந்தக் கலைஞர் நினைவு நூலகத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் வைக்க உள்ள புத்தகங்களை தேர்வு செய்வதற்கு மூத்த கல்வியாளர்கள் மற்றும் பொது நூலக அதிகாரிகள் தலைமையில் நிபுணர் குழு அமைக்கபட்டுள்ளது.
மேலும், நிபுணர் குழு தேர்வு செய்து வழங்கும் பட்டியல் அடிப்படையில் புத்தகங்களை வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் கலைஞர் நினைவு நூலக பணிகள் 100% நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டச் சான்றிதழில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு