மதுரை:மதிவாணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "நான் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக என் மீது மதுரை வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ""மனுதாரர் தனது மகள், மருமகனுடன் கடந்த செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அதற்கு ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என நகைச்சுவையாகத் தலைப்பை எழுதியுள்ளார்.
எதற்கு நீதிமன்ற காவல்?
இதைப் பார்த்த வாடிப்பட்டி காவல் துறையினர், மனுதாரர் நகைச்சுவைக்காகப் பதிவிட்டுள்ளார் என நினைக்காமல், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கருதி, அவர் மீது கூட்டுச்சதி, குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சி செய்வது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாஜிஸ்திரேட் 'தி கிரேட்'
அத்தோடு விடாமல், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்காக, வாடிப்பட்டி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளனர். ஆனால், அங்கிருந்த நீதித் துறை நடுவர் அருண், புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட முடியாது என்று மறுத்துவிட்டார். இவரைப்போல தமிழ்நாட்டில் உள்ள மற்ற நீதித் துறை நடுவர்களும் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.