மதுரை:திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தேர்தல் ஆணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளர், அவரது குடும்பத்தாரின் சொத்து விவரங்கள், வழக்கு - தண்டனை விவரங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல்செய்ய வேண்டும்.
பிரமாணப் பத்திரம் மாற்றப்படவில்லை
இந்த வேட்புமனு, பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரம், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது.
இதில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை, வேட்பாளரைச் சார்ந்தவர்களின் கடந்த ஐந்தாண்டு வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள், ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கோரப்படவில்லை.
கேள்வியெழுப்பிய நீதிபதிகள்
எனவே, மேற்கூறிய விவரங்களைக் குறிப்பிட பிரமாணப் பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே, அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதுவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு, பிராமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பெறவும், அதனைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வேட்புமனுவோடு சி1 படிவத்தை இணைத்து நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்களை வேட்பாளரிடமிருந்து பெற்ற பிறகு, அவர் விளம்பரம் செய்ய தவறினால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைக் குறிப்பிடும் படிவத்தை வேட்புமனுவில் இணைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு (நவம்பர் 29) ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: MHC Condemns: தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படும் பக்தர்களின் காணிக்கை