உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலம் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.
ஆவணித் திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய திருவிளையாடல் லீலைகள் நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா சுவாமி சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் இன்று(ஆக.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆக.29 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.
ஆக.29 ஆவணி மூல உற்சவத்தின் முதல் திருநாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆக.30 - நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆக.31 - மாணிக்கம் விற்றல், செப்.1 - தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்.2 - உலவாக்கோட்டை அருளியது,
செப்.3 - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்.4 - வளையல் விற்றல், செப்.5 - நரியை பரியாக்கியது, செப்.6 - பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்.7 - விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.