மின்னணு தொழில்நுட்ப உலகம் நொடிக்கு நொடி பல்வேறு மாற்றங்களுடன் வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை, மிகப் பெரும் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியுள்ளது.
செல்பேசி, கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இன்றைய வாழ்வு முறையில் மிக மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆனால் இடத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இப்பொருள்களை 'நுண் குழைமக் கருவி' (மைக்ரோ ஃபுளுயிடிக் டிவைஸ்-Micro Fluidic Device) மூலமாக மடித்தோ, சுருட்டியோ இனி எங்கும் கொண்டு செல்லலாம்.
மின்னணு சாதனங்களில் உள்ள அனைத்து நுண் கருவிகளையும், நுண் குழைமக் கருவிகளாக மாற்றம் செய்துவிட்டால் மடித்தோ, சுருட்டியோ கொண்டு செல்ல முடியும். இந்த ஆய்வினை 70 சதவிகிதத்திற்கும் மேல் வெற்றிகரமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை நிறைவு செய்துள்ளது. மின்னணு தொழில்நுட்ப உலகில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை இந்தக் கண்டுபிடிப்பு உருவாக்கப்போகிறது என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.