தமிழ்நாடு

tamil nadu

'போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து

By

Published : Jul 10, 2021, 6:52 PM IST

தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Manankathan
Manankathan

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள மானங்காத்தான் கிராமத்தினர் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கயத்தாறு-தேவர்குளம் மெயின்ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது கயத்தாறு காவல் துறையினர் சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'சாலை வசதி கோரியது சட்ட விரோதமாகுமா?'

இந்த வழக்கின் இறுதி அறிக்கை கோவில்பட்டி ஜேஎம் இரண்டாவது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி, பீர் மைதீன், அல்லா பிச்சை, உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், "மனுதாரர்கள் தங்கள் கிராமத்திற்கான பொது சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரித்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது.

'ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு'

தங்களின் பொதுத்தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. குடிநீர், உணவுப் பொருள் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை சட்ட விரோதமானதாக கருத முடியாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதை சட்டவிரோதம் என கூற முடியாது என்பதால், கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது" என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.

ABOUT THE AUTHOR

...view details