மதுரை: புது மண்டபம் வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மதுரை புதுமண்டபம் வியாபாரிகள் சங்கம் கூட்டுறவு சங்க விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, புது மண்டபம் பகுதியில் உள்ள கடைகளை மூட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வந்தனர். பின்னர் புது மண்டபத்தில் உள்ள வியாபாரிகளுக்கு, குன்னத்தூர் சத்திரம் பகுதியில் கடைகள் கட்டிக்கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
புதுமண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு என 169 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டட பணிகள் நிறைவடைந்த நிலையில், கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், நேற்று (பிப். 21) அலுவலர்கள் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
எவ்விதமான சம்மனும் வழங்கப்படாத நிலையில், உடனடியாக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மின் இணைப்பு கொடுக்கப்படும் வரை குன்னத்தூர் சத்திரத்திற்கு கடைகளை மாற்றத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 12 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்ட பின்னரே குன்னத்தூர் சத்திரப் பகுதிக்கு கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது