மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த கலாவதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால், அங்கு டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "அவ்வாறெனில் கஞ்சா சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? எனக் கேள்வியெழுப்பினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடினால் பாண்டிச்சேரி செல்வது, இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்குச் செல்வது என குறிப்பிட்ட நீதிபதிகள், கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து, அதனடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்யவும், அதற்கான அறிக்கையை டிசம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளாக இழப்பில் டாஸ்மாக் கடைகள் - ஆர்.டி.ஐ பதில்