திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் தமிழகம் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. விவசாயத்தை நம்பி பல ஏழைகளின் வாழ்வாதாரம் உள்ளது. பயிர்களை பூச்சிகள், நோய் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க பெரும்பாலான விவசாயிகள் உயிரி உரம், உயிரி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உயிரி உரம், உயிரி பூச்சிக்கொல்லிகளை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு தரமின்றி தயாரிக்கப்படுவதுடன் உரிய உரிமம் இன்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு வேளாண்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து அப்பாவி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.
தமிழகத்தில் உயிரி உர மருந்துகள் மற்றும் இடுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உரச்சட்டம் 1985, 2004 சட்டபிரிவு 2 ஏஏ, 2 ஹெச் ஆகியவற்றை மீறுவதாக உள்ளது. இது உயிரி உரம் தரகட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது. உயிரி உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது மற்றும் உயிரி உரம் விற்பனை உரிமம் தொடர்பாக ஆந்திர மாநிலம் பல வழிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழக வேளாண்துறை மூலம் தரமான விதைகள், தரமான உரம், தரமான பூச்சி உரங்கள் என அனைத்து விதமான இடுப்பொருள்களையும் தரமானதாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் தரமான உயிரி உரங்களை நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். தமிழகத்தில் தரமற்ற உயிரி உரம், உயிரி பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை முறைபடுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.