மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் 6ஆம் நாளான இன்று (ஏப்.10) மீனாட்சி அம்மனும் சொக்கநாதர் சுவாமியும், தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித லீலை அரங்கேற்றினர். இன்று இரவு 7.30 மணியளவில் மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆறாம் நாள் திருவிழா காமாதி ஆறும், கலையாதி ஆறும், பதமுத்தி ஆறும், வினைக்குணம் ஆறினையும் ஒழித்தற் பொருட்டு நிகழ்வதாகும். ஆறாம் நாள் இரவு விருஷப வாகன சேவை மிகவும் முக்கியமானது. அடியார்களுக்கு ஆண்டவர் அருள்புரிய விருஷப வாகனத்தில் எழுந்தருளி வருவதை புராணங்களால் நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளை நிறம் அதனிடத்து எவ்வித மாசும் இல்லை என்பதை உணர்த்தும், தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாகக் கொண்டுள்ளது. சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாய் அமைந்துள்ளன.