தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பதவி உயர்வு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - பேராசிரியர்கள் பதவி உயர்வு விவகாரம்

பேராசிரியர்களின் பதவி உயர்வு குறித்து சிண்டிகேட் குழு கூடி முறையான நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jun 26, 2021, 6:38 AM IST

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் உயர் மட்டக்குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக் குழு, விசாரணை செய்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கை அளித்தது.

முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் குழு துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்கு தடை விதித்தும், உயர் மட்டக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.

இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம் உயர் மட்டக் குழு அறிக்கைப் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, சிண்டிகேட் உறுப்பினராக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்படத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று(ஜூன்.25) மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜர் பல்கலைக் கழகம் சார்பாக அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் 'பல்கலைக்கழக உயர் கமிட்டி கூடி முறைகேடு குறித்து விசாரணை நடத்தி துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் குழு கூடி நடவடிக்கை எடுக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூடி முறையான நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; தவறும்பட்சத்தில் நீதிமன்றமே உத்தரவுகளைப் பிறப்பிக்கும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: செத்த பயலுவளா ஏம்ல இப்டி பண்ணுதீக: ஜி.பி. முத்து மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details