தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நள்ளிரவுவரை நீடித்து நேற்று காலையில் முடிவடைந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பத்து மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 130 ஊராட்சி மன்றத் தலைவர், 1161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் ஆயிரத்து 399 பதவிகளுக்கு மூன்றாயிரத்து 550 பேர் போட்டியிட்டனர்.
இவற்றில் பத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், 288 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்கு மூன்றாயிரத்து 252 போட்டியிட்டு களத்தில் மக்களைச் சந்தித்தனர்.
உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைந்து நான்காண்டுகளாக காலியாக இருந்த இடங்களைக் கைப்பற்ற ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இவற்றையெல்லாம்விட தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாகக் களம்கண்டது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுக கூட்டணிக்கு தேனி மாவட்டத்தில் சற்று சறுக்கலாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தமுள்ள பத்து மாவட்ட ஒன்றிங்களில் உள்ள 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களில், அதிமுக - 45, தேமுதிக – 3, பாஜக - 1 என ஆக மொத்தம் 49 வார்டுகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
திமுக – 40, காங்கிரஸ் - 2 என திமுக கூட்டணி 42 இடங்களையும், அமமுக – 5 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.
இதே போல 10 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில், அதிமுக - 7, பாஜக - 1 என அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிவிடும் சூழல் உள்ளது. ஆனால் ஒன்றியங்களைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள எட்டு ஒன்றியங்களில் தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை திமுகவும், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களை அதிமுகவும் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளன.