தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா!

"உலக நாடுகளில் வாழ்ந்து வரும் ஏழை மக்களின் குரலாக ஐநாவில் என்னுடைய பேச்சு இருக்கும். அவர்களை அடித்தட்டு வாழ்விலிருந்து மேம்படுத்துவதே எனது நோக்கம்." - என்று பேசும் நேத்ராவின் தன்னம்பிக்கையும், பொதுநலமும் மாற்றத்தை மண்ணில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் விதைக்கும் என்பது உறுதி. இந்தக் கட்டுரையின் வாயிலாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் நல்லெண்ண தூதர் நேத்ராவோடு பேசுவோம்....

நெகிழ்ச்சியில் நேத்ராவின் பெற்றோர்கள்
நெகிழ்ச்சியில் நேத்ராவின் பெற்றோர்கள்

By

Published : Jun 5, 2020, 12:50 PM IST

Updated : Jun 5, 2020, 8:31 PM IST

தனது மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தைக் கரோனா ஊரடங்கு காலத்தில், ஏழை எளிய மக்களுக்காக மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன் செலவு செய்தார். இந்தச் செலவினை மேற்கொள்ள தந்தையின் விருப்பத்திற்கு அவரது மகள் நேத்ரா முழு ஒத்துழைப்பு அளித்திருந்தார்.

கடந்த மாதம் மே.31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் இந்தச் செயலை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்நிலையில் மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம், மோகன் மகள் நேத்ராவை உலக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்து, ரூபாய் ஒரு லட்சத்தை பரிசுத் தொகையாகவும் வழங்கி ஊக்குவித்துள்ளது. இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக மாணவி நேத்ரா சிறப்பு பேட்டி அளித்தார்.

நேத்ராவின் தன்னம்பிக்கையும், பொதுநலமும்...

அப்போது பேசிய அவர், "உலக நாடுகளில் வாழ்ந்து வரும் ஏழை மக்களின் குரலாக, ஐநாவில் என்னுடைய பேச்சு இருக்கும். அவர்களை அடித்தட்டு வாழ்விலிருந்து மேம்படுத்துவதே எனது நோக்கம். தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளின் ஏழைகளுக்காகவும் நான் குரல் கொடுப்பேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என்னுடைய முன்மாதிரி, அவருடைய ஆளுமையும் வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை அழைத்துச் சென்ற நுண்ணறிவும் என்னை ஈர்த்தவை.

ஐநாவின் நல்லெண்ண தூதர் நேத்ரா சிறப்பு பேட்டி

தற்போது எனக்கு பரிசுத்தொகையாக கிடைத்த பணத்தை எனது பெற்றோர்களின் ஆலோசனையோடு நல்ல நோக்கத்திற்குச் செலவிடுவேன். உலக நாடுகளில் வாழ்கின்ற வசதியான மற்றும் நடுத்தர பொது மக்கள் ஏழை மக்களுக்கு கொஞ்சமாவது உதவுவதை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இப்படி ஒரு எண்ணம் எல்லோருக்கும் இருக்குமானால் ஏழை என்று யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து." என்று தன்னம்பிக்கையோடு தெரிவித்தார்.

'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்' - குறளுக்குப் பொருத்தமான நேத்ரா:

தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி நேத்ராவின் தாயார் பாண்டிச்செல்வி பேசுகையில், "உலகின் மிக உயர்ந்த அவை ஐநாவில் என் மகள் நேத்திரா பேசுகிறார் எனும்போது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற குறளின் மனநிலையில் பெருமைப்படுகிறேன். இன்னும் பல உயர்ந்த சிறப்புகளை அவள் அடைய வேண்டும்." பெருமிதம் கொண்டார்.

நெகிழ்ச்சியில் நேத்ராவின் பெற்றோர்கள்

நேத்ராவின் தந்தை மோகன் கூறுகையில், "வறுமையால் பாதிக்கப்பட்ட உலக மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவியாக வேண்டும் என்பதைச் சொல்லி சொல்லி வளர்த்ததன் பலனை இன்று கண்கூடாகக் காண்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது." என்றார். நேத்ரா சொன்னது போலவே அடித்தட்டு மக்களின் குரல் அவர் வாயிலாக ஐநாவில் எதிரொலிக்க வாழ்த்துகள்!

இதையும் படிங்க: ஐநாவின் நல்லெண்ண தூதரான முடிதிருத்தகத் தொழிலாளியின் மகள் நேத்ரா!

Last Updated : Jun 5, 2020, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details