மதுரை: உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணி சார்பில் மொத்தம் 45 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு 42 பதக்கங்களைக் குவித்து, முதலிடம் பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
உலகத் தரவரிசைக்கான பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. சிங்கப்பூர், ஜெர்மனி, எகிப்து, ஸ்பெயின் மற்றும் இந்தியா உள்பட 19 நாடுகள் இந்த பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றன.
தமிழ்நாடு பாராபேட்மிண்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் தலைமையில் உகாண்டா சென்ற தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். போட்டிகள் முடிந்து அவர்கள் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அப்போது இதுகுறித்து பத்ரி நாராயணன் கூறுகையில், “உகாண்டாவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியாவிலிருந்து 45 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா மட்டுமே 12 தங்கம்; 14 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே 5 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக பதக்கங்களை வென்ற வீரர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிக பதக்கங்களை வென்ற நாடாகும்.