தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய நபர்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையில் சரியான முறையைப் பின்பற்றாத காரணத்தால், பெரும்பாலும் பெண் தேர்வர்களே இங்கு தேர்வாகும் நிலை உள்ளது என மதுரையிலுள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜபூபதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
இடஒதுக்கீட்டு முறையில் குழப்பம்: ''பெண்களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை டிஎன்பிஎஸ்சி கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இதற்கு ஆண் தேர்வர்கள் யாரும் எதிர்க்கவில்லை. பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதனை கிடைமட்ட ஒதுக்கீடு (Horizontal) மற்றும் செங்குத்து (Vertical) ஒதுக்கீடு முறையின் மூலமாகப் பணிகள் நிரப்பப்படுகின்றன.
ஆனால், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டை கிடைமட்டமாகக் கணக்கிடாமல் செங்குத்தாகக் கணக்கிடுவது ஆண் தேர்வர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக 100 பணிகளுக்காகப் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் பெண்களுக்கான 30% இடத்தை ஒதுக்கி வைத்துவிட்டே, பிற ஒதுக்கீடுகளைக் கணக்கீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ள 70% இடஒதுக்கீட்டில் ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர்.
இடஒதுக்கீட்டு முறை:செங்குத்து முறை இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5%; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினர் 7.5%, தாழ்த்தப்பட்டோர் 15% என கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இதில் கிடைமட்ட முறையில் பெண்களுக்கான 30% மற்றும் தமிழ்வழியில் பயின்றோருக்கு 20% என கணக்கிடப்படுகிறது. இது உள்ஒதுக்கீட்டு முறையாகும்.
காரணம், கிடைமட்ட முறையில் பகிர்ந்தளிக்கப்படுபவர்கள் அனைவரும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டு முறையிலும் வருவர். ஆகையால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கிடைமட்டமாக கணக்கிடாமல், செங்குத்து முறையில் கணக்கிட்ட காரணத்தால், தற்போது நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்வில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 57 பேர் பெண்கள். 9 பேர் மட்டுமே ஆண்கள். இந்தத் தேர்வில் 87% பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வைப் பொறுத்தவரை முதல்நிலைத் தேர்விலேயே ஆண்கள் வடிகட்டப்பட்டு, பெண்கள்தான் பெரும்பாலும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதற்குப்பிறகு முதன்மைத்தேர்வில் இயல்பாக பெண்கள் அதிகமாகவே தேர்வாகிவிட்டார்கள். இதற்காக ஆண்கள் சரியாகத்தயாராகவில்லை என்பது பொருளல்ல.
இயல்பாகவே நமக்குத்தெரியும் பெண்கள் நன்றாகப் பயிலக்கூடியவர்கள்தான். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளே கூட இதனைப் பிரதிபலிக்கின்றன. ஐஏஎஸ் போன்ற தேர்வுகளில் 25% தான் பெண்கள் தேர்வு பெறுகிறார்கள். 75% ஆண்களாக உள்ளனர். ஐஐடி போன்ற இடங்களில் பெண்கள் வெறும் 10% தான். தமிழ்நாட்டில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டுள்ளதால் அதிகமாகப் பெண்கள் தேர்வாகின்றனர். ஆனால், பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்..?:பொதுவாக எந்த மாதிரியான அளவுகோலைக்கொண்டு தேர்வர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமோ, அவ்வாறு தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வானவர்களில் எடுத்துக்காட்டாக 100 பேர் என்றால், இவர்களில் 30% பேர் பெண்கள் இருக்கிறார்களா என்பதைப்பார்க்க வேண்டும்.
இதில் இயல்பாகவே அவர்கள் வந்துவிடுவார்கள். அவ்வாறு 30% வந்த பிறகு சிறப்பு ஒதுக்கீட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது கிடைமட்ட ஒதுக்கீட்டு முறையின் அளவுகோலாகும். ஆனால், இந்த முறைக்கு மாறாக தேர்வு செய்யப்படுகின்ற காரணத்தால், பெண்கள் அதிகளவிலும், ஆண்கள் மிகக்குறைவாகவும் தேர்வு பெறுகின்ற நிலை ஏற்படுகிறது.