சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஒரு பொதுநல மனுவினை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்குக்கான பணியிடங்கள் அதிகமாக உள்ளன. மதுரை மாநகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தை மற்றும் மகளிருக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அங்கு அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதில் சில மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
அரசு மாநகராட்சி மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் கூடுதலான மருத்துவமனைகளை பார்க்கும் அவலநிலை உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கு இருந்தாலும் அதற்கு பணியாற்ற போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை. இதனால், நோயாளிகள் பெரும்பாலும், தனியார் மருத்துவமனையை தேடிச்செல்கிறார்கள். மேலும், ஸ்கேன், இதர பல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளது.
கடந்த மாதம் 14ஆம் தேதி மதுரையில் 22 வயது இளம்பெண் பிரசவம் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததில், அப்பெண் உயிரிழந்தார்.
பல மருத்துவமனைகளில் செவிலியர் ஓய்வின்றி வேளை செய்யும் சூழல் உள்ளது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடம் நிரப்புவது குறித்தும், இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியில் இருப்பது குறித்தும் சுகாதார, நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.