தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்வாரியம்... தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரிய வழக்கு: 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மின் வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத் தலைமைப் பொறியாளர் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு தலைமைப் பொறியாளர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மின் வாரிய உதவி பொறியாளர் பணியிடம்

By

Published : Jun 12, 2019, 3:13 PM IST

புதுக்கோட்டை திருவாப்பூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2018 பிப்ரவரி 14ஆம் தேதி மின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு நடைபெற்றது. உதவிப் பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படவில்லை. மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பலர் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி பணியிடங்களை நிரப்பக்கோரி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஏப்ரல் 27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது எங்களது மனுவைப் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் நகலுடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமைப் பொறியாளரைச் சந்தித்து இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நான் உட்பட பலர் தேர்வு செய்யப்படவில்லை. ஆகவே, எனக்காக ஒரு பணியிடத்தை காலியாக வைக்கவும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத் தலைமை பொறியாளர் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படாததோடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக மின்வாரிய தலைமைப் பொறியாளர் இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பணி நியமனம் என்பது இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனத் தெரிவித்தார். மேலும் மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details