மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த ராமன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்:
"எங்கள் குடியிருப்பு பகுதியில் கிரஷர், எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவனமும், கல்குவாரியும் செயல்படுகிறது. இவர்கள் இதன் அருகிலுள்ள, 90 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலத்தைதான் விவசாய பணியின்போது களமாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தினோம். தற்போது குவாரி, கிரஷர் ஆகியவற்றால் அருகிலுள்ள பள்ளி கட்டிடமும், விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் தூசி கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் அருகில் காஸ் நிரப்பும் மையமும் பாதுகாப்பின்றி உள்ளது. அதிகளவிலான லாரிகள் அடிக்கடி வந்து செல்வதால் எப்போதும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. புதிதாக யாரும் வீடு கட்ட முடியவில்லை.
எனவே, கிரஷர், எம்.சாண்ட் நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி நடத்தியதற்காக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், வேறு இடத்தில் களம் அமைத்து தரவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனுக்களை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரணை செய்தனர்.