மதுரை : தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து, நாகை கோடியக்கரைக்கு மாற்றப்பட்ட 2 புள்ளிமான்கள், காணாமல் போன விவகாரத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தலைமை வனப்பாதுகாவலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த மனோகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்கா பொதுமக்களின் பூங்காவாக 1871- 72 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.
தஞ்சை சிவகங்கை பூங்கா
யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தப் பூங்காவின் பழமையைக் கருத்தில் கொண்டு சில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொல்லியல் துறையில் விதிகளுக்குள்பட்டு செய்யப்பட்டது.
இந்த பூங்கா பள்ளி குழந்தைகளுக்கான பூங்காவாக இருந்தது . நரி, முயல், புள்ளிமான்கள், ஒட்டகம் என சிறு உயிரியல் பூங்கா ஆகவே செயல்பட்டது.
சீர்மிகு நகர திட்டம்
இந்தப் பூங்கா ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் 6.86 கோடி ரூபாய் மதிப்பில் மறுகட்டமைப்பு செய்ய திட்டமிடப்பட்டது. தஞ்சை சிவகங்கை பூங்கா 2019ஆம் ஆண்டு முதல் பூங்கா மூடப்பட்டது.
அப்போது, தலைமை வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் பேரில், அங்கிருந்த புள்ளி மான்களை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மான்கள் சரணாலயத்திற்கு அனுப்ப திட்டமிட்டு 43 மான்களையும் கோடியக்கரை பகுதியில் உள்ள சரணாலயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2 மான்கள் கெதி என்ன?
ஆனால் தஞ்சை மாவட்ட வன அலுவலர் தரப்பில், பிற விலங்குகளோடு 41 மான்கள் மட்டுமே கோடியக்கரை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இரண்டு மான்கள் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து, நாகை கோடியக்கரைக்கு மாற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்கு பட்டியலில் உள்ள புள்ளிமான்கள், காணாமல் போன விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." எனக் கூறியிருந்தார்.
வழக்கு- விசாரணை
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்,"2 மான்கள் உயிரிழந்து விட்டதாகவும், அவற்றின் உடற்கூராய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இதையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து தலைமை வனப்பாதுகாவலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபார் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையும் படிங்க : தொடர் மழை: சாலையோரம் மேய்ந்த புள்ளி மான்கள்!