மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், டெல்லி மெட்ரோ ரெயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி நடந்து வருகிறது. 20 லட்சம் மக்கள் இந்த சேவையை பயண்படுத்தி வருகின்றனர்.
இந்த மெட்ரோ ரயில் சேவை இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகரமாக மதுரை இருக்கிறது. சென்னையைப் போல் போக்குவரத்து நெருக்கடியாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நகர் என்று பெயரும் மதுரைக்கு உண்டு.
சென்னையைத் தொடர்ந்து கோவையில் 'மெட்ரோ ரயில் திட்டம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரையில் இத்திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருவது தென்தமிழ்நாடு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
மதுரை மாநகர் தற்போது அருகிலுள்ள புறநகர் பகுதிகளான திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகளால் விரிவடைந்துள்ளது. பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பிக்கிடக்கிற மதுரையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’ வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றிட தொடர்ந்து பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.