தமிழ்நாடு

tamil nadu

திருவாவடுதுறை ஆதின மோசடிப் புகார் - இந்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!

மதுரை: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்களில் மோசடி குறித்த வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Oct 10, 2019, 5:33 PM IST

Published : Oct 10, 2019, 5:33 PM IST

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட, திருவிடைமருதூர், அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி கழிப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

இதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.550 வசூலிக்கப்படுகிறது. மேலும் உபய வரவு ரூ.100 வசூலிக்கப்பட்டு அது கோயிலுக்கு செலுத்தப்படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்துக்காக பெறப்படும் ரூ.550இல் இருந்து, ரூ.200 கோயில் பங்காகவும், மீதமுள்ள பணம் பூஜைக்காகவும் செலவு செய்யப்படுகிறது. இதில் சுமார் 2 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.

இதேபோல் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட சில கோயில்களில் பல குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்களில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு சூர்யாவின் தீபாவளி பரிசு!

ABOUT THE AUTHOR

...view details