தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடவுளை வழிபடுவது தனிநபர்களின் நம்பிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

திருமங்கலம் அருகே அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோவிலை அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை மேற்கொண்டு கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 8, 2022, 11:51 AM IST

Updated : Oct 8, 2022, 12:44 PM IST

மதுரை:மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோயிலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கோவில் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. அனைத்து தரப்புனரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், கோவில் திறக்கப்பட உள்ளது என சிறப்பு அலுவலர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று (அக்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வாலகுருநாதசுவாமி திருக்கோயிலில் சிலையை கோவிலில் வைத்திருப்பது தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் சிவில் வழக்குகள் காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளன. கோவிலும் மூடப்பட்டு உள்ளது. 2011ஆம் ஆண்டிலேயே, இந்த கோவில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர தகுதியான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல், இருந்தது. தற்போது திடீரென கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறு காரணமாக கோவிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது.

கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தகுதியான நபரை அறநிலைய துறை நியமித்த போதும் கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது என்று கூறினாலும் கூட, அந்த கோவிலை தனிப்பட்ட கோவிலாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் நிர்வாகத்தில் பிரச்சனை இல்லை. இவ்வாறு இருக்கும் போது, ​​அறநிலையதுறையால் நியமிக்கப்பட்ட அலுவலர், திடீரென கோவிலை திறக்க உள்ளோம் என வெளியிடப்பட்ட நோட்டீஸ் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.

கோவிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை. எனவே, கோவிலை மீண்டும் திறப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குலசை தசரா: போதிய பஸ் இல்லாமல் 11 கி.மீ. நடந்த மக்கள்

Last Updated : Oct 8, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details