மதுரை:திருநெல்வேலி மாவட்டம், ஆனைகுளம் ஊராட்சியின் பணத்தை கடந்த 2019ஆம் ஆண்டு முறைகேடு செய்ததாகவும், அதை விசாரிக்க அமைத்த அதிகாரி இதுவரையில் விசாரணையை முடிப்பதில் ஏன் தாமதம் உள்ளது என்பதை விசாரிக்கக் கோரி ஆனைகுளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சியில் 2019ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையுள்ள 7 மாத காலங்களில் குடிநீர் விநியோகம் பராமரிப்பு சம்பந்தமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பொய்யான ஆவணங்கள் தயாரித்து, 2லட்சத்து 78ஆயிரத்து 966 ரூபாயை பொது பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த பொது பண மோசடியை, அப்போதிருந்த தனி அதிகாரியும், ஊராட்சி ஊழியர் ஜான்ஸ் மில்லர் என்பவரும் சேர்ந்து ஊழல் செய்துள்ளனர்.
முறைகேடு குறித்த ஆதரபூர்வமான புகாரைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், அவரது நேர்முக உதவியாளரை ( சத்துணவு ) கடந்த 22.12.2021 அன்று விசாரணை அதிகாரியாக நியமித்து, மனுதாரரின் புகாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், விசாரணை அதிகாரி இதுவரை மனுதாரரை விசாரிக்கவில்லை. அதிகாரி நியமிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்த விட்ட நிலையிலும், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் உள்ளதாகத் தெரியவில்லை.
ஆகவே, மனுதாரரின் புகார் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன் இன்று (செப்.10) விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரங்கள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீர்நிலைகளில் உள்ள குடியிருப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு - ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள்