மதுரை: திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகளை மாற்று வழியில் செயல்படுத்த கோரி அமைதியான வழியில் போராடியவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணை நேற்று (அக்.14) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
தென்காசி மாவட்டம் ஆத்துவழி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது கணவர் ஜெயராமன் பொறியியல் சார்ந்த தொழில் செய்து வருகிறார். இவர் திருமங்கலம் ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை பகுதியில் செயல்படுத்த உள்ள நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்றும் தற்போது செயல்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி என் கணவர் கிராம தலையாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, 19ஆம் தேதி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.