நாம் தமிழர் கட்சியின் பழனி மண்டல செயலாளரான கஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழ் கடவுள் முருகன் தொடர்பான பாரம்பரியங்களையும், வழிபாட்டு முறைகளையும் வெளிக்கொணரும் வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் வீரத்தமிழர் முன்னணி எனும் பெயரில் தனி அமைப்பு உள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட புறவழிச் சாலையில் இருந்து, மயில் ரவுண்டானா வழியாக பழனி கோவிலுக்கு வேல் நடைபயணம் செல்ல காவல்துறையினரிடம் மனு அளித்தும், ஊரடங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் " எனக் கோரியிருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேல் நடைபயணம் நடத்த அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதம் சார்ந்து நடைபெறும் நிகழ்விற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், அனைத்து மதத்தினரும் அனுமதி கேட்க வாய்ப்புள்ளது எனக் கூறி, வேல் நடைபயணம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என மறுத்தார்.