மதுரை: திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணி நிறுவனம் ஒப்பந்தத்தின்பேரில் கடந்த 3 ஆண்டுகளாக கட்டணம் வசூலித்துவருகிறது.
கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சுங்கச்சாவடியில் 90 சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான டிடிஆர் இன்ஃப்ரா என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 தினங்களாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் எதுவும் செய்து தரப்படவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் 45 பேரை ஆள்குறைப்பும் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (அக்.27) இரண்டாவது ஷிப்டுக்கு வந்த சுங்க சாவடி ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல், சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்காமல் திறந்து விட்டதால் ஒரு மணி நேரமாக வாகனங்கள் கட்டணமில்லாமல் சென்றன.
இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் காவலர்கள் சுங்க சாவடி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இரு தினங்களில் உரிய முடிவு எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இதையும் படிங்க: சம்பளம் வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!