மதுரை:மதுரையைச் சேர்ந்த கமால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு, பல தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியளித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அளவுக்கு அதிகமாகத் தொற்று பாதிப்பு இல்லாதவர்களுக்கும் மருத்துவம் அளிக்கின்றனர். இதனால் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர்.
மதுரையில் உள்ள தேவதாஸ் தனியார் மருத்துவமனையில், காய்ச்சல் சிகிச்சைக்காகச் சென்ற எனக்குத் தொற்று பாதிப்பு இல்லாத நிலையில், கரோனா எனக் கூறி சிகிச்சை அளித்து, ரூ. 5 லட்சம் வரை சிகிச்சைக்கான தொகையாகச் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அரசு விதிமுறைப்படி, கரோனா சிகிச்சைக்கு குறைந்த அளவிலான தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல பல மருத்துவமனைகள் கரோனா காலத்தைப் பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கான தொகை என மக்களை ஏமாற்றி வசூலிக்கின்றனர். இதை அரசு உடனடியாக உற்று நோக்கி அளவுக்கதிகமாக சிகிச்சைக் கட்டணம் வசூல்செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா இல்லாத எனக்கு, போலியாகச் சிகிச்சை அளித்த தேவதாஸ் தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையின் அனுமதியை ரத்துசெய்து, செயல்பட இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு அரசு, தேவதாஸ் மருத்துவமனை உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: தலைமைக் காவலருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!