மதுரை:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் இன்று (அக்.29) மதுரைக்கு வந்தனர். அவர்கள் இருவருக்கும், அந்தந்த கட்சிகளின் சார்பில் பேனர் வைத்தும், மேளதாளம் முழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைவர்களின் வருகையால், திமுக, அதிமுக இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படாதவாரு பெருங்குடி விமான நிலைய சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.
மாலை 6.30 மணி அளவில், விமானநிலையம் வந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை வரவேற்கும் போது, திமுக தொண்டர்கள் அதிமுகவினர் வைத்த முதலமைச்சரின் பேனர்களை கிழித்தெறிந்தனர்.
முன்னதாக விமான நிலைய வளாகத்தில் வைத்து ஸ்டாலினை வரவேற்க, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தேனி மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் முயன்றார், அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து கண்ணில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை போர்த்தியும் பூங்கொத்துகள் கொடுத்தும் வரவேற்றனர். வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன்செல்லப்பா, செங்கோல் கொடுத்தும் வரவேற்றார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டின் இரண்டு தலைவர்களின் வருகையையொட்டி, மதுரையிலிருந்து விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் விமான நிலையத்திற்குள் செல்லாவிட்டால் பயணம் ரத்து செய்யப்படும் என அஞ்சி பயணிகள் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை நடந்து செல்லும்படி கூறிய போலீசார், செய்தியாளர்கள் படம் பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதையும் படிங்க:தேவருக்காக கூட்டணி அமைத்த திமுக - அதிமுக