மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவ சேவா டிரஸ்ட் தலைவர் தங்கப்பன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2002 ஆம் ஆண்டு "ஸ்ரீ ஆதிகேசவ சேவா டிரஸ்ட் பதிவு செய்யப்பட்டது. இதன் நோக்கம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலின் சொத்துக்கள் மற்றும் தினசரி பூஜைகள் மேற்கொள்ள வேண்டிய பொருட்களை வழங்குவதாகும். ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசத்தின் ஒன்றாகும்.
இக்கோயில் 1960 ஆம் ஆண்டு, இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கோயிலின் மூல தெய்வம் விஷ்ணு. இந்த தெய்வம் முழுமையான தங்க கவசத்துடன் வைர கற்கள் மூலம் அலங்காரம் செய்யப்படும். தற்போது இந்த நகைகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்து அறநிலையத்துறை சார்பிலும், சாமி நகைகள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், வழக்கு பதியப்பட்டு திருநெல்வேலி சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வந்தது. அந்த விசாரணையில், மூன்று பூசாரிகள் உட்பட, 34 பேர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.
தற்போது, கோயிலில் குற்றம் சாட்டப்பட்ட பூசாரிகளின் உறவினர்கள் பூசாரியாக பணி புரிந்து வருகின்றனர். அந்த 3 பூசாரிகளின் குடும்பத்தார் யாரும் கோயில் பணியில் அமர்த்தக்கூடாது. கோயிலில் உள்ள கொடிமரம் பழுது அடைந்த நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் நகைகளை சாமிக்கு அணிவித்து, அவை பொது மக்களின் பார்வையில் இருக்கவும், கோயிலிலுள்ள கொடிமரத்தை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கோயில் கொடி மரம், கீறலான கொடி மரமாக உள்ளது. அந்த கொடி மரத்தை நடக்கூடாது. பழமையான கோவிலில், இதற்கு முன்னதாக கோவில் நகை கொள்ளை போனது. அரச்சகர் கைது செய்யப்பட்டார் எனக் கூறினார்.
கோவில் தரப்பு வழக்கறிஞர், ஜனவரி மாதம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற மனு ஏற்புடையது இல்லை. கொடி மரத்தை ஒன்றரை ஆண்டுகள் மூலிகை எண்ணெயில் ஊற வைத்து எடுத்துள்ளனர். அது வைரம் பாய்ந்த மரம். கேரளா மாநிலம் இடுக்கியில் இருந்து, 200 ஆண்டுகள் பழமையான மரம், 23 அடி உயரம் கொண்டது.
வனத்துறை,கேரளா போலீசாரின் அனுமதி பெற்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் கீறல் இல்லை. எல்லாம் ஆகம விதிப்படி நடக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான நகைகள் திருடு போனது, இதுதொடர்பாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு மேல் முறையீட்டில் உள்ளது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள் நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அதிக நாட்கள் நகைகள் இருக்க முடியாது. ஆகவே உரிய முறைப்படி நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உள்ள நகைகளை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
மேலும் எவ்வளவு நகைகள் உள்ளன, என்ன வகையான நகைகள் உள்ளன என்பது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை டிச.,22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதற்கிடையில், குமரி மாவட்டம் குறித்து பேசிய நீதிபதிகள், குமரி மாவட்டத்தில் வர்ம கலை குறித்த தகவல்கள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது.
அவை தற்போது வரை நடைமுறையில் உள்ளது பாராட்டுக்குரியது என்று நெகிழ்ச்சியுடன் கூறிய நீதிபதிகள், குமரி மாவட்டத்தில் கோவில் சொத்துகள் தொடர்பான மலையாள மொழியில் உள்ள ஆவணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பினர்.
இதையும் படிங்க:வாசுதேவநல்லூரை பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு