மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாயில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்காக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிதியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையான ஜிக்கா கடனாக வழங்குவதாகவும், 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஜிக்காவிடம் இருந்து நிதி கிடைக்கப்பெறவில்லை. தற்போது வரை அங்கு சாலை மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மதுரை எய்ம்ஸ் குறித்து, பல்வேறு விவரங்களை கோரினார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, எய்ம்ஸ்க்கு ஜிக்காவிடமிருந்து கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்றும், ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விவரம் தெரிவிக்கப்படும் எனவும், கடன் கிடைத்த பின்பே கட்டுமானப்பணி துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.