தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

By

Published : Apr 7, 2021, 8:40 PM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வழக்கில் முக்கிய பங்கு காவலர் முருகனுக்கு உள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

sathankulam custodial death case
தந்தை மகன் கொலை வழக்கு செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம், கண்ணன்குளத்தைச் சேர்ந்த முருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கிறேன்.

சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கட்டாயபடுத்தியதன் பெயரில், நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இவ்வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே, இவ்வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று (ஏப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முருகனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தந்தை மகன் இறப்பு வழக்கில் முருகன் முக்கிய பங்கு வகிப்பவராக கருதப்படுகிறார். இருவரையும் கடையிலிருந்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்ததில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கிறது. சிபிஐ தரப்பு 35 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

விசாரணை அலுவலர்கள் தற்போதுதான் கரோனா தாக்கத்திலிருந்து திரும்பி உள்ளனர். எனவே விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் வேண்டும். எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதி பாரதிதாசன், சிபிஐ.யின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்து, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details