தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேவர் சிலைக்கு சொந்த செலவில் பராமரிக்க அனுமதி கோரிய வழக்கு: நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - தேவர் சிலைக்கு மாலை

மதுரை: நெல்லை ஜங்ஷன் அருகே உள்ள தேவர் சிலைக்கு சொந்த செலவில் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தி பராமரிக்க அனுமதி கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

court
court

By

Published : Dec 15, 2020, 2:24 PM IST

நெல்லையைச் சேர்ந்த மந்திரமூர்த்தி என்ற மூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், “நெல்லை ஜங்சன் பகுதியில் தேவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு விழாவில் எனது தாத்தா உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆண்டுதோறும் சிலை முன்பாக அக்டோபர் 30ஆம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். முக்கியமான விழாக்களில் அரசியல் தலைவர்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் வழக்கம்.

இந்தச் சிலை அமைந்துள்ள பகுதியில் நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்லும் என்பதால், சிலை அசுத்தமடையும் அபாயம் உள்ளது.

இதனால் இந்தச் சிலையை பராமரிக்கவும் பாதுகாக்கவும் சிலையைச் சுற்றி கண்ணாடி கூண்டு அமைத்து பாதுகாப்பு அம்சங்களை எங்களது சொந்த செலவில் வைத்து பராமரிப்பதற்காக அரசிடம் அனுமதி கோரினோம்.

ஆனால் அனுமதி வழங்கவில்லை. எனவே பாதுகாப்பாக எங்களுக்கு கண்ணாடி கூண்டு பைபர், பாதுகாப்பு அம்சங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 7.5%இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடைகோரிய வழக்கு - தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details