தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சந்தேகத்திற்கு இடமாக இளம்பெண் இறப்பு குறித்த வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு - madurai high court

புதுக்கோட்டையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளம்பெண் இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய மனுவில் தமிழ்நாடு உள்துறை செயலர், காவல் துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Oct 28, 2021, 5:21 PM IST

மதுரை:புதுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரின் மகள் சிவஜோதியும், சிவகுருநாதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிவஜோதியின் குடும்பத்தார், சிவகுருநாதனின் குடும்பத்தாரை மோசமான வார்த்தைகளாலும், சாதியின் பெயரைச் சொல்லியும் திட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி சிவஜோதி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரே அவரது உடலை எரித்துள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை

ஆனால், இது தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை, உடற்கூராய்வும் செய்யப்படவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு செப்டம்பர் 25ஆம் தேதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து உண்மையை தெரிவிக்க அஞ்சுகின்றனர். ஆகவே சிவஜோதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோரது அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல் துறை தலைவர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ராம்குமார் மரண வழக்கு: உடற்கூராய்வு செய்த மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details