மதுரை:பெங்களூரு செல்வதற்காக நேற்று (மே 7) மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொடர்ந்து ஒரு வருடமாக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளை பேசுகிறோம். அதை இந்த அரசு செய்யப்போவதில்லை.
பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது எனக் கூறியது. புதிய பென்சன் திட்டத்தில் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளது என பாஜக சொல்லியதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சொன்னதைதான் தற்போது நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் சொல்லியுள்ளார். இதன்மூலம், தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் கூறியது பொய் என்பதை சட்டசபையிலேயே ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஆளுநர் பேசியதை அரசியலாக்க வேண்டாம்:பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என ஆளுநர் மட்டுமல்ல பல துறைசார்ந்த வல்லுநர்களும் கூறியுள்ளனர். குறிப்பாக, கேரளா, பாலக்காடு, ஆழப்புலா என கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 66 கொலைகள், சமீபத்தில் நடந்த 2 முக்கிய கொலைகளில் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பேசியது, அவரின் உளவுத்துறை அறிவில் பேசியது. அவர் 30 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஆளுநர் அவ்வாறு பேசியுள்ளார். இதனை அரசியலாக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார்.