மதுரை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைச் சட்டம்-2019 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
ஒரு விவசாயி நேரடியாக தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒப்பந்ததாரர் விரும்பிய இடத்தில் முகாம் அமைத்து அவர்களது விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். அதே நேரத்தில் விவசாயத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.
விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய் கோட்ட குழுவின் மூலமே தீர்வு காண முடியும். இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில் தான் முறையீடு செய்ய முடியும்.