மதுரை:மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக தென் மாவட்ட மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரிதும் சேவை புரிந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கியது.
நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.14-க்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7.04 மணி நேரம். அதேபோன்று பிற்பகல் 1.50-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.15-க்கு மதுரை வந்தடையும். மொத்தப்பயணம் 7.25 மணி நேரம். சென்னையையும் மதுரையையும் இணைக்கின்ற பகல் நேர சூப்பர் ஃபாஸ்ட் ரயில், வைகை எக்ஸபிரஸ் ஆகும்.
இந்நிலையில் நேற்று(அக்.15) மதுரையிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஒன்று தாமதமாக வந்ததால், காலை 30 நிமிடங்கள் தாமதமாக 7.40-க்கு புறப்பட்டுச்சென்றது. ஆனாலும் சென்னைக்குச் சென்றடைய வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, 497 கி.மீ. தூரத்தைக்கடந்து 16 நிமிடங்கள் முன்பாகவே சென்றடைந்து சாதனைப் படைத்தது.
இந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட் ரவி சங்கர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பிரத்யேகமாக பேசுகையில், ”அனைத்து மட்டத்திலும் உள்ள ரயில்வே பணியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் திறமையான வழிகாட்டுதல்தான் இந்த சாதனைக்குக்காரணம்.
இதேபோன்ற சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதியும் நிகழ்த்தியிருந்தது. ஆனால் நேற்று அதையும் விட மூன்று நிமிடங்கள் குறைவாக சென்றடைந்தது சாதனைக்குரிய வேகமாகும். இந்தியன் ரயில்வே அனுமதிக்கும்பட்சத்தில் அனைத்து ரயில்களையும்கூட இதைவிட குறைவான நேரத்தில் இயக்க முடியும். அந்த அளவிற்கு நாம் தற்போது தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளோம்.
தற்போது தேஜஸ் ரயில் சற்றேறக்குறைய இதே வேகத்தில்தான் சென்னைக்கும் மதுரைக்கும் பயணிக்கிறது. அதற்கு இணையாக வைகை எக்ஸ்பிரஸ் அந்த சாதனையைப்படைத்து வருவது, அதன் ஓட்டுநராக எனக்குப் பெருமையே. இத்தனைக்கும் தேஜஸ் ரயிலுக்கான நிறுத்தங்கள் வெறும் இரண்டு.