மதுரை: 2019 ஜனவரி மாதம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையான ஜைகா நிறுவனம் கடனாக வழங்குவதாக கூறப்பட்டிருந்தது.
அடிக்கல் நாட்டு விழாவின் போது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மருத்துவமனைக்கான பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை, ஜைகாவிடமிருந்து நிதி கிடைக்காத நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சுற்றுச்சுவர் அமைக்கும் மற்றும் மண்பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்டுள்ளார்.
அவருக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஜைகா அலுவலர்களுடன் ஆலேசானை நடத்தியுள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் ஜைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், எய்ம்ஸ் அமைப்பதற்கான மொத்த செலவில் 85 விழுக்காடு நிதியான சுமார் 2 ஆயிரம் கோடியை ஜைகா நிறுவனம் வழங்கும் எனவும் பதிலளித்துள்ளது.