திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான (எம்.எல்.ஏ) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 2020-21ம் நிதியாண்டிற்கு திருத்தம் செய்யப்பட்ட புதிய நிதிநிலை அறிக்கை வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி பிரபல ஆங்கில நாளிதழில், “புதிய நிதிநிலை அறிக்கை தேவையில்லை, அமைச்சர்கள் செலவினங்களை மறு ஆய்வு செய்து வருகிறார்கள்” என்று பொருள்படும் தலைப்புடன் வெளியான கட்டுரை ஆச்சரியத்தை அளித்தது.
அதில் “ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பிற்குள் தேவையானவற்றைச் செய்ய முடியும் என்று கூறுகிறார் பாண்டியராஜன்” என்ற வாசகம் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. அந்தக் கட்டுரையில் கூறப்படும் பாண்டியராஜன் என்பவர், தமிழக அமைச்சர் திரு மாபா பாண்டியராஜன் அவர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கட்டுரை இந்திய அரசியலமைப்பு சட்டம், துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு (நான்கு தளங்களில் வகைபடுத்தபட்ட) உட்பட அரசாங்க செலவினங்கள் சார்ந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டப்பேரவைக்குத் தான் அளித்துள்ளதே தவிர, நிர்வாகத்திற்கு (அமைச்சர்களுக்கு) அல்ல.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அவரவர் துறையினால் சட்டப் பேரவையில் சமர்பிக்கப்பட்ட விரிவான மானியக் கோரிக்கைகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் முழுமையாகச் செயல்படுத்த வேண்டியது ஒவ்வொரு அமைச்சரின் கடமை. நிதிநிலை அறிக்கையும், மானியக்கோரிக்கையும் (வெளித்தோற்ற அளவிலாவது) இந்த அரசாங்கத்தினால் முக்கியமாக அங்கீகரிக்கப்படுகிறது.
15ஆவது சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல், கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டப்பட்ட காலங்களில், 35 நாள்களில் ஏறத்தாழ 30 நாள்கள் அல்லது 86% நேரம், இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே சட்டப்பேரவை செயல்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும், ஒரு ரூபாய் கூட அதிகமாக செலவு செய்வது மட்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதமல்ல.
ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறைவாக செலவு செய்வது (சேமிப்பு) திட்டத்தின் , துறை அல்லது அமைச்சரின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தோல்விகள், விதி மீறல்கள் என்ற அளவில் , அரசின் நிதிநிலை மீது கணக்காயர் (CAG) அலுவலகம் மேற்கொள்ளும் வருடாந்திர ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டும் உள்ளது.
மானியக் கோரிக்கைகள் ஆகியவை, 54 துறைகளைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செலவினங்களைக் குறைப்பது, குறைந்தபட்சம், மூன்று விஷயங்களுக்காக சிக்கல்கள் நிறைந்தது.
- விருப்பத்திற்கு உட்பட்ட செலவுகள் கட்டாய செலவுகள் ஆகிய இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. கட்டாய செலவுகளை தவிர்க்க முடியாது. அவை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. எனவே அவற்றைப் பூர்த்தி செய்தே ஆகவேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும் (இல்லை என்பதே நிதர்சனம்) தவிர்க்க முடியாத செலவுகள் அல்லது கட்டாய செலவுகள் சார்ந்த துறைகளின் செலவினங்களை (உதாரணமாக 25% வரை) நிச்சயமாகக் குறைக்க முடியாது.
- முதலீட்டு செலவினங்களுக்கும், வருவாய் செலவினங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளும் துறைவாரியாக மிகப் பெரியது. உதாரணமாக பொதுப்பணித்துறை மிகப்பெரிய அளவிற்கு முதலீட்டு செலவினங்களை செய்துவருகிறது (ஏறத்தாழ 90% புதிய சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றில்). இதுபோன்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தில், இவற்றை மிகவும் எளிதாக நிச்சயமாக குறைக்க முடியும். ஆனால் அதே நேரம் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் செலவுகள் வருவாய் செலவினங்ள் (ஏறத்தாழ 90% மாதாந்திர ஊக்க தொகை அவர்களுடைய விடுதி செலவுகள் போன்றவை) சரியாக இயங்கும் இதயம் மற்றும் பொறுப்புடன் செயல்படும் மூளை உள்ள எவரும் இதுபோன்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். உண்மையில் இவை குறைக்கப் படவே கூடாது. இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் அதிகரிக்கப்பட வேண்டும்.
- மானிய ஒதுக்கீடுகள் துறைகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் வேறுபடும். உதாரணமாக பொதுப்பணித்துறைக்கு 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு 1000 கோடி, இந்து அறநிலையத் துறைக்கு 220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இவற்றையெல்லாம் சீராக 25 விழுக்காடு குறைக்க வேண்டும்? கோவில்களிடம் இருந்து 50 கோடி ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்திடம் இருந்து 200 கோடி ரூபாயும் குறைக்க வேண்டும் என்று திரு பாண்டியராஜன் அவர்கள் எண்ணுகிறாரா? அதற்குப் பதிலாக இந்த நிதியை, பொதுப்பணித் துறையிடம் இருந்து 1.67 விழுக்காடு என்ற அளவில் உயர்த்தி, அதே 250 கோடி நிதியை பெறமுடியுமே? திரு பாண்டியராஜன் இந்துக்களுக்கு எதிரானவரா? அல்லது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானவரா?