மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜூன்.22) தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'வருகின்ற 2025ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறையில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழும். அதற்கான அடித்தளத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
'தற்கொலை முயற்சிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன':தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்பதற்காகத்தான் முதலமைச்சர் மாநில கல்விக்கொள்கையை அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சரின் தலைமையில் மாநில கல்விக்கொள்கையை வகுக்கும் வல்லுநர்களைக் கொண்ட முதல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். அதிலிருந்து பெறப்படுகின்ற தகவல்களைக் கொண்டு மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன.
தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தேர்ச்சி பெறத் தவறும் குழந்தைகளுக்காக உடனடித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிலேயே உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தருகிறது. தேர்வு எழுதத் தவறிய மாணவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
’பிற மாணவர்களோடு குழந்தைகளை ஒப்பிடாதீர்கள்’: ஃபெயில் என்ற சொல்லையே நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம். முதல் முயற்சியில் மதிப்பெண் குறைவாகிவிட்டால், கவலையில்லை. அடுத்த சில நாட்களில் நடைபெறும் அடுத்த முயற்சியில் மதிப்பெண் பெறலாம் என்றே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாணவர்கள் இதனை தோல்வியாகக் கருதக்கூடாது.