ஹைதராபாத் : சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் வீரப்பன். இவர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில காவலர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார்.
வீரப்பன் மீது 184 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் காவலர்கள் மற்றும் வன அலுவலர்கள் ஆவார்கள். இதை மறுக்காத வீரப்பன், ஆம். ஆனால் 184 அல்ல, 120 எனப் பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தபோது கூறினார்.
சந்தன வீரப்பன்
சிறு வயதிலேயே மலையூர் மம்பட்டியான் என்பவரால் ஈர்க்கப்பட்ட வீரப்பன், 1972ஆம் ஆண்டு முதன் முதலில் கைதுசெய்யப்பட்டார். வீரப்பன் மீது 17 வயதிலேயே கொலைக் குற்றச்சாட்டு ஒன்றும் இருந்தது. இந்நிலையில் அவரது வாழ்வு திசைமாறியது.
காட்டுக்குள் யானை தந்தம் மற்றும் சந்தன மரங்களை வெட்டி கடத்தினார். இதை எதிர்த்த வனத்துறை அலுவலர் சிதம்பரம் என்பவரை 1987இல் கடத்திக் கொன்றார். இந்தக் கொலை நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய அரசின் கவனம் வீரப்பன் மீது விழுந்தது.
வன அலுவலர் கொலை
தொடர்ந்து அவரை கைது செய்ய அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் வீரப்பன், பண்டில்லாப்பள்ளி ஸ்ரீநிவாஸ் என்ற வன அலுவலரை கொன்றுவிட்டு தப்பினார். அவரை கைது செய்ய முயன்ற காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
இவ்வாறு வீரப்பன் தென்னிந்திய காடுகளில் தனி ராஜ்ஜியம் நடத்திவர இவரை பிடிக்க ஐபிஎஸ் அலுவலர் கி. விஜயகுமார் தலைமையில் அதிரடி படை அமைக்கப்பட்டது. இந்தப் படை வீரப்பனின் நடமாட்டம், செல்வாக்குள்ள கிராமங்கள் என அனைத்தையும் கழுகுபோல் கவனித்துவந்தது. வீரப்பன் எத்தனை மணிக்கு எங்கு செல்வார் என்பது வரை அனைத்து தகவல்களையும் காவலர்கள் திரட்டினார்கள்.
100 உளவாளிகள்
இந்த நிலையில் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, சேதுமணி ஆகியோர் 2004, அக்.18 சுட்டு வீழ்த்தப்பட்டனர். காவல் துறை தரப்பிலும் 4 காவலர்கள் காயமுற்றனர்.