ஈரோடுஅடுத்த சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச்சேர்ந்த ராமசாமி என்பவருக்குச்சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தநிலையில், அப்பகுதியில் செயல்படும் சாயம், சலவை தொழிற்சாலைகளின் கழிவுநீரால் ஏற்பட்ட நிலத்தடி நீர் பாதிப்புகள் அக்கிராமத்தினரையும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியிருந்தன.
கிராமத்தில் நிறம் மாறிய நிலத்தடி நீர்: இதன் ஒருபகுதியாக, அத்தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரினால் விவசாயம் செய்ய முடியாமல் ஒருவர், விவசாயத்தைக் கைவிட்டு தனது சொந்த நிலத்தில் குடோன் கட்டி, வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட எண்ணியிருந்த நிலையில், வெள்ளை நிறத்தில் அவர் வாங்கிய ஹாலோ பிளாக் கற்கள், அப்பகுதியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பெற்ற நீரால் நனைக்கப்பட்டபோது, பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் தோற்றமளித்தன.
வெள்ளை நிறத்தில் இருந்த ஹாலோ பிளாக் கட்டட சுவர் இவ்வாறாகக் காரணம், சாய, சலவை ஆலை கழிவுநீர் கலந்த தண்ணீரை நிலத்தடியில் இருந்து மோட்டார் மூலமாக தெளித்ததே ஆகும்.
இதனால், கட்டட வேலைகளை நிறுத்திய விவசாயியைப்போல, அப்பகுதியிலுள்ள கிணற்று நீரை மோட்டார் மூலமாக தோட்டத்திற்கு பாய்ச்சும்பொழுது கழிவுநீரின் காரணமாக நுரை பொங்க செல்வதால் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஏனைய விவசாயிகளும் தள்ளப்பட்டிருந்தனர்.
சுகாதாரத்துறை ஆய்வு:இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் பல முறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்திற்கு இன்று (ஆக.18) வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அடங்கிய குழுவினர், விவசாயி ராமசாமியின் கட்டடப் பகுதிகளையும், ஆழ்துளைக்கிணற்று நீர், விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று நீர் ஆகியவற்றையும் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
ஈரோடு அருகே நிறம் மாறிய நிலத்தடி நீர்... ஆய்வுசெய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அருகிலுள்ள சாய, சலவை, கெமிக்கல் ஆலைகளுக்குச்சென்று ஆய்வு செய்தனர். தண்ணீரின் தன்மைகளையும் ஆலைகளையும் முழுமையாக ஆய்வு செய்த பின்பு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாய தொழிற்சாலை கழிவுகளால் நிறம் மாறிய நிலத்தடி நீர்.. கண்டுகொள்ளுமா அரசு?