ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் கேன்குழி பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அவர்களது வீடுகளுக்கு மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள 78 வீடுகள் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் உள்ளதாகக்கூறி, அந்த வீடுகளை காலிசெய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையினர் சார்பில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் இங்கு வீடுகள் கட்டி வசித்து வருவதாகவும், தற்போது கீழ்பவானி வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் இடம் வாய்க்காலுக்கு பாதிப்பில்லாமல் உள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் வாய்க்காலை விட்டு 100 அடிக்கும் மேல் உள்ளது. அதனால் இவ்விடத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் என வருவாய்த்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் இப்பகுதியை நேரில் பார்வையிட்டார்.